தமிழ்நாடு மாவட்ட ஊராட்சிகளின் செயல்பாடுகள்

தமிழ்நாடு மாவட்ட ஊராட்சிகளின்  செயல்பாடுகள்:

நோக்கம்:

தமிழ் நாட்டில் 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 24 ன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஊராட்சி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மக்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், உதவி இயக்குநர் நிலையில் ஒரு அலுவலர் ஒவ்வொரு மாவட்ட ஊராட்சிக்கும் செயலராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். அவருக்கு உறுதுணையாகப் பணியாளர்கள் உள்ளனர். மாவட்ட ஊராட்சி, சம்மந்தப்பட்ட துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்பட பின்வரும் நிலைக்குழுக்களை அமைக்கலாம்.

  1. உணவு மற்றும் வேளாண்மை
  2. தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள்
  3. பொதுப் பணிகள்
  4. கல்வி
  5. மது விலக்கு உள்ளிட்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு.

இக்குழுக்கள் தவிர, தேவையின் அடிப்படையில் மாவட்ட ஊராட்சியால் கூடுதல் நிலைக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நிலைக் குழுவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்திட வேண்டும். மாவட்ட ஊராட்சித் தலைவர், மேற்படி நிலைக் குழுக்களின் பதவி வழி உறுப்பினர் ஆவார்.

செயல்பாடுகள்:

  1. மாவட்ட வளர்ச்சித் திட்டம் தயாரித்தல்.
  2. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் நிர்வாக அறிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மாவட்டத்தின் ஆண்டறிக்கையைத் தயாரித்தல்.
  3. விவசாயம், நிலவள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழிப்பண்ணை, மீன்வளம் மற்றும் கிராமத் தொழில்கள் ஆகியவற்றைத் திட்டமிடல் மற்றும் ஆய்வு செய்தல்.
  4. ஊரக வீட்டு வசதி (குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய வீட்டு வசதி திட்டங்களை) திட்டமிடல் மற்றும் ஆய்வு செய்தல்
  5. பெரிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளைக் கண்டறிதல்.

நிதி:

மாவட்ட ஊராட்சிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஏதும் இல்லை. மாநில நிதி ஆணைய மானியம் மட்டுமே முதன்மையான வருவாயாகும். குறிப்பிட்ட சில இனங்களில் மாவட்ட ஊராட்சிக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடம் மூலமாக கிடைக்கும் வருவாய் முக்கியமானவையாகும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியில் 8 விழுக்காடு மாவட்ட ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த மானியம் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்படுகிறது.

மாவட்ட திட்டக் குழு:

மாவட்டத் திட்டக் குழு என்ற அமைப்பினை ஏற்படுத்திட 74வது இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது. அதன்படி மாவட்டத் திட்டக் குழு 31 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் திட்டக்குழுவின் தலைவராக மாவட்ட ஊராட்சித் தலைவரும், துணைத்தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவரும் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்திற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர்.

மாவட்டத் திட்டக்குழுவின் பணிகள்:

  1. மாவட்டப் பரவலாக்கப்பட்ட திட்டம் தயாரிப்பதற்குத் தேவையான மாவட்ட அளவிலான வள ஆதாரங்கள் விபரங்களை சேகரித்தல், தொகுத்தல் மற்றும் நாளது தேதிவரையிலான விபரங்களைப் பெறுதல்.
  2. தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளித்தல்
  3. மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள், திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் முன்னுரிமை அளித்தல்.
  4. மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரித்த திட்டங்களை ஒருங்கிணைத்து மாவட்ட வளர்ச்சித் திட்டம் தயாரித்தல். மாவட்டத் திட்டக்குழு தயாரிக்கும் வளர்ச்சித் திட்டம், மாநிலத் திட்டக்குழு தயாரிக்கும் மாநில அளவிலான திட்டத்திற்கு உதவியாக இருத்தல்.
  5. மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
  6. வளர்ச்சித் திட்டங்களில் தொண்டு நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்.
  7. மாநில அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் தொடர்பான ஆலோசனைகளை மாநில அரசுக்கு வழங்குதல்.
  8. மாநில அரசால் அவ்வப்போது ஒப்படைக்கப்படும் இதர பணிகளை நிறைவேற்றுதல்.

மேலே விவரிக்கப்பட்ட பணிகளை தவிர 5 வது மாநில நிதிக்குழுவின் பரிந்துரையின்படி 80 % மூலதன மாநில நிதி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது மாவட்ட திட்டக்குழுவின் பொறுப்பாகும்.

மூலதன மாநில நிதியில் 80 விழுக்காடு நிதி மாவட்ட ஊராட்சிகளுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு இடையேயான பகிர்மான விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட வாரியாக பகிர்ந்து அளிக்கப்படும். நிதித் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் ஆலோசனையின்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினால் வெளியிடும் அரசாணையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் திட்டங்களுக்கு மாவட்ட திட்டக் குழுவால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாவட்ட ஊராட்சிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள்:

மாநில அளவில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கும் சொந்த கட்டடங்கள் உள்ளன. 31 மாவட்ட ஊராட்சிகளிலும் கணினி, பிரிண்டர் மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விருதுகள்:

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளன.

ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது:

ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளிப்பதுடன் ஊராட்சிகளின் திறனை மேம்படுத்த ஏதுவாக மாநில அரசுகளுக்கு உறுதுணையாக, ஊராட்சிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றிற்கு ஊக்கத்தொகை அளிக்கும் விருதினை ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது என மாற்றி மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராஷ்ட்ரிய கெளரவ கிராம சபை விருது:

வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரியும் கிராம ஊராட்சிகளை அங்கீகரிக்கவும், ஊக்கமளிக்கவும் ஏதுவாக 2012ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம், ராஷ்ட்ரிய கெளரவ கிராம் சபை விருதினை ஏற்படுத்தியுள்ளது.

 

Share Social

Leave a Reply

WhatsApp chat